நமது வனம் இந்தியா பவுண்டேஷன் பசுமை சார்ந்த பணிகளை தொலைநோக்கு திட்டங்களுடன் முன்னெடுத்து வருகிறது.
மரம் வளர்ப்பு,
சுற்றுசூழல் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துதல்,
நீர் மேலாண்மை,
குப்பைகளை வளமாக்குதல்,
இயற்கை விவசாயம்
என்ற கொள்கையின் வழியே நமது அமைப்பு செயல்படுவதை அனைவரும் அறிந்தே ஆகும்.
உலகெங்கும் சுற்றுசூழல் குறித்த பல்வேறு துறையினர் கவனம் செலுத்தி வருகின்றனர். அவ்வாறு கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு மாற்று சிந்தனைகளை முன்வைத்து சுற்றுசூழலை பாதிக்காத வண்ணம் மனிதகுலம் வாழ வழிவகுக்கின்றனர். அவ்வகையில் தற்போது மேலைநாடுகளில் குறிப்பாக அமெரிக்கா, பிரான்ஸ், ஜெர்மனி, ஹோலாந்து, ஸ்வீடன், சீனா, துபாய் போன்ற நாடுகளில் புவி வெப்பமயமாதல், சுற்றுசூழல் மாசினை குறைக்கும் நோக்கில் தாங்கள் எழுப்பும் வணிக கட்டிடங்கள், இல்லங்களில் பசுமை கூரை என்ற புதியதோர் தீர்வினை செயல்படுத்தி வெற்றி கண்டுவருகின்றனர். இந்தியாவில் தற்போது இதுபோன்ற தீர்வுகளுக்கு ஆதரவு பெருகி வருகின்றன.
தற்போது தொழிற்சாலைகள், வணிக வளாகங்கள், அடுக்குமாடி குடியிருப்புகள், தனிநபர் இல்லங்கள் பெருக்கத்தால் காடுகள் அழிப்பு, வயல்கள் அழிப்பு, நீர் ஆதாரம் இழப்பு,பல்வகை உயிரினங்களின் மறைவு என்ற பெரும் இழப்பை நாம் கண்டு வருகிறோம். அதேசமயம் வேலைவாய்ப்பு, உலக மையமாக்கல், பொருள் உற்பத்தி பெருக்கம் என்ற கண்ணோட்டத்தில் பார்க்கும் பொழுது இவைகளை தவிர்க்க இயலாமல் போய்விடுகின்றன. இவற்றை சமாளித்து வாழ்வியல் முறையை எளிதாக்க ஓர் புதிய தீர்வாக கட்டிடங்களுக்கு பசுமை கூரைகளை அமைக்கும் வழிமுறையை உருவாக்கப்பட்டுள்ளது.
பசுமை கூரை அமைப்பதின் நோக்கம்:
1.கட்டிடங்களின் மேல் விழும் வெப்பம் குறைகிறது.
2.கூரையின் வெற்றிடத்தை பசுமையாக்குவது.
3.கட்டிடங்களுக்கு ஏற்படும் பராமரிப்பு செலவை குறைகிறது.
4.கட்டிடத்தின் வசிகரதன்மையை அதிகரிகிறது.
பசுமை கூரையின் பயன்கள்:
1.பசுமை கூரை அமைப்பது மூலம் கான்க்ரீட் கட்டிடங்களின் ஆயுள்காலம் கூடுகிறது.
2.புறஊதா கதிர்களை தடுத்து நன்மை அளிகிறது.
3.வெயில் காலங்களில் குளிரையும், குளிர் காலங்களில் வெப்பத்தையும் தந்து தட்பவெப்ப நிலையில் சமசீர்தோஷ நிலையை பெற உதவுகிறது.
4.இதில் வளரும் புல் மற்றும் பூ தாவரங்களால் பல்லுயிர் ஈர்க்கப்படும்.
5.கட்டிடத்தை சுற்றியும், கட்டிடத்தில் வாழும் நபர்களுக்கு தூய்மையான காற்று உறுதி செய்யப்படுகிறது.
6.AC, Heater, AIR Purifier, என்ற கருவிகளின் பயன்பாடுகள் குறையும். அதனால் விளையும் சுற்றுசூழல், ஆரோக்கிய தீமைகள் தடுக்கப்படும். மின்சாரம் மிச்சமாகும்.
7.தற்போதைய பொருளாதார, சுற்றுசூழல், தனிநபர் ஆரோக்கியத்திற்கு பசுமை கூரை சிறந்த தீர்வாக முன்வைக்கப்படுகிறது.
8.கான்க்ரீட் கட்டிட கூரைகளில் வெப்பம் இறங்காமல் தடுக்க நாம் பல்வேறு செலவுகளை செய்து வருவது தடுக்கப்படும்.
பசுமை கூரை அமைக்கும் முறை:
இயற்கையில் நிலமானது ஆழத்தில் இருந்து பார்த்தால் பாறைகள், கடினகற்கள், நீர் ஓட்டம், கடின மண், மண், தாவரங்கள் இருக்கும். இதுவே பூமியை வெப்பமாகாமல் இருக்க உதவுகிறது.
அதுபோல் பசுமை கூரை அமைக்கும் முறையானது தரையில் இருந்து மேலாகஆறு அடுக்கு முறையில் அமைக்கப்படும்.
1.WATER PROOFING அடுக்கு முதலாக அமைக்கவேண்டும், அவை ரப்பர் அல்லது பிளாஸ்டிக் கொண்டு அமைத்து கொள்ளலாம்.
2.இரண்டாம் அடுக்கு PROTECTIVE LAYER பிளாஸ்டிக் சீட் கொண்டு அமைக்க வேண்டும்.
3.மூன்றாவது அடுக்கு FILTER SHEET ஐ பொறுத்த வேண்டும்.
4.நான்காவது அடுக்கு DRAINAGE MAT அமைக்க வேண்டும்.
5.ஐந்தாவது அடுக்காக மண் இட வேண்டும்.
6.ஆறாம் அடுக்காக தாவரங்களையோ, புல்வெளி அடுக்களையோ, இல்லை காய்கறி செடிகளையோ அமைத்து கொள்ளலாம்.
மேலும் சில தடுப்பு உபகாரணங்களை கொண்டு நீர், மண், கீழ் மற்றும் பக்கவாட்டு கூரை பகுதிகளில் செல்லாதாவாறு பார்த்துக் கொள்ள வேண்டும். இந்த பசுமை கூரை முறை மும்பை போன்ற பெரும் நகரங்களில் இல்லங்களில் அமைக்க கட்டிட கலைஞர்கள் திட்டங்களை உருவாக்கி செயல்படுத்த முயற்சித்து வருகின்றனர்.
இந்தியா போன்ற 130கோடி மக்கள் தொகை கொண்ட நாடுகளுக்கு பல்வேறு சுற்றுசூழல் பிரச்னைகள், இயற்கை வள பற்றாக்குறைகள் உள்ளது. அதனால் மக்கள் சந்திக்கும் இன்னல்களும் ஏராளம். என்னதான் சிறந்த அரசு நிர்வாகம் அமைந்தாலும் தொடர்ச்சியாக அனைத்து தேவைகளை பூர்த்தி செய்வது என்பது நடைமுறை சாத்தியம் இல்லை. ஆதலால் இதுபோன்று மாற்று வழிமுறை சிந்தனைகளை மக்களால் செயல்படுத்த வேண்டும்.
தற்போதுள்ள மனித இனத்தின் வேகமான வளர்ச்சிக்கு ஈடாக நமது பூமியை பாதுகாப்புடையதாக நிலைநிறுத்திக்கொள்ள நாம் எந்தளவு சுற்றுசூழலை ஆரோக்கியமாக வைத்திருக்கிறோம் என்பதிலேயே அடங்கும். அதற்கு நம் கண்முன் எளிதான தீர்வாக இருப்பது நமது இல்லம், தொழில்சாலைகள், வணிக வளாகங்களை பசுமை கட்டிடமாக மாற்றி கொள்வது தான்.
பசுமை கட்டிடம் என்பது மின்சாரம், வெப்பம், நீர், வெளிச்சம் ஆகிய வளங்களை சிக்கனப்படுத்தி குப்பைகளை குறைத்து மறுசுழற்சி செய்தும் அங்கே வாழும் மனிதர்கள் வாழ்வதற்கு தூய்மையான காற்றை சுவாசித்து நலமுடம் கடமைகளை ஆற்ற சிறந்த வழிமுறையாகும். இந்தியாவில் தற்போது பல்வேறு இடங்களில் பசுமை கட்டிடங்களை செயல்படுத்தி வருகின்றனர். நமது வனம் அமைப்பும் பல்லடம் பகுதியில் வனாலயம் என்கிற வளாகத்தை பசுமை கட்டிடமாகவே உருவாக்கி வருகிறோம்.
அப்போதுதான் நிலையான வாழ்க்கை முறையை நாம் அமைத்துக்கொள்ள முடியும். இதுவே இந்திய தேசத்து மக்களின் வாழ்க்கையை ஆனந்தமாகவும், அமைதியாகவும் இருக்க வழிவகுக்கும். நாடும் வளம் பெரும்.
கட்டுரை ஆக்கம் - செந்தில்குமரன்.
பட உதவிகள்: freepik.com, urbanscape-architecture.com, google images.
தகவல் உதவிகள்: Environmental science indian journal, economic times.